ஸ்டாக்ஹோம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு, சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு தெரிவித்து உள்ளார். ”இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும், உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. விவசாயிகள் போராட்டம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் இதில் எதிலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. திசை மாறிய பேரணி இதற்கிடையே டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆதரவு பெருகி வருகிறது டெல்லியின் பல்வேறு எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வருகிற 6-ந் தேதி அவர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் டெல்லிக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க முள்வேலி உள்ளிட்ட பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.